''தமிழக உரிமைகளை விட்டுக்கொடுத்த தலையாட்டி பொம்மைகளை வீழ்த்துவோம்'' - மதுரை கூட்டத்தில் பிருந்தா காரத்
தமிழக உரிமைகளை விட்டுக்கொடுத்த தலையாட்டி பொம்மைகளை வீழ்த்துவோம் எனமதுரை பிரச்சாரத்தில் பேசிய பிருந்தா காரத் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மதுரை டி.எம்.கோர்ட் அருகே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக மதுரை நகரில் போட்டியிடும் திமுக, மதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில், மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் பேசுகையில், தமிழக தேர்தல் முடிவு மாநில எல்லையைத் தாண்டி எதிரொலிக்கும். கடந்த 5 ஆண்டுகளாக அதிமுக அரசு மக்களின் பேச்சைக் கேட்கவில்லை.
மத்திய அரசின் பேச்சை மட்டும்தான் கேட்டார்கள். இபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் இருவரும் தலையாட்டி பொம்மைகளாக இருக்கிறார்கள். வேளாண் சட்டத்தை எதிர்த்து 4 மாதங்களாக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

விவசாயிகளுக்கு ஆதரவாக நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. பாஜக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் கூட விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால் தமிழக அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பிவில்லை. பாஜகவின் தலையாட்டி பொம்மையாக அதிமுக அரசு இருப்பதாக கூறினார்.
மேலும், இந்த கொரோனா காலத்தைப் பயன்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை பறித்தது மோடி அரசு. இந்த காலத்தை பயன்படுத்தி பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்தனர். பொதுமக்கள் உழைப்பைப் பயன்படுத்தி உருவான பொதுத்துறை நிறுவனங்களை விற்று நாட்டின் முதுகெலும்பை உடைக்கிறார்கள்.
இதற்கு தலையாட்டி பொம்மை அதிமுக அரசு ஆதரவளிக்கிறது. இந்த அரசை அகற்ற வேண்டும் என கூறினார்.
எனவே, இங்கே மேடையில் இருக்கிற மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட திமுக கூட்டணி வேட்பாளர்கள் அனைவரையும் பெரு வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.