குடிபோதையில் இருந்த மணமகன் - திருமணம் செய்ய மறுத்த மணமகள்
தருமபுரி அருகே முகூர்த்த நேரத்திற்கு வராமல் அளவுக்கதிகமாக குடித்து விட்டு போதையில் மாப்பிள்ளை கிடந்ததால் திருமணம் நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அருகே தொட்டபடகாண்ட அள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சரவணன் (32) என்பவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நேரு நகரைச் சேர்ந்த லட்சுமி (22) என்ற பெண்ணிற்கும், இரு வீட்டார் சம்மதத்துடன் நேற்று (10.12.21) திருமணம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே வஜ்ஜிரபள்ளம் என்ற கிராமத்திலுள்ள ஈஸ்வரன் கோவிலில் திருமணம் நடக்க இருந்தது. இதற்காக மணப்பெண் தனது உறவினர்களுடன் பேருந்தில் கோவிலுக்கு வந்தனர்.
ஆனால், மாப்பிள்ளை மற்றும் உறவினர்கள் யாரும் அங்கில்லை. இதையடுத்து மணப்பெண் வீட்டார், மணமகன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது, அங்கு மது குடித்த மயக்கத்தில் சரவணன் மயங்கி கிடப்பதைக் கண்டு, மணமகள் மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதைத் தொடர்ந்து சரவணன் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பித்துச் செல்ல முயன்றுள்ளார். அவரை பிடித்த மணமகளின் உறவினர்கள் மாரண்டஹள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், மணமகன் சரவணன் இனிமேல் குடிக்க மாட்டேன், பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என காவல் நிலையத்தில் கெஞ்சியுள்ளார். ஆனால் மணப்பெண் லட்சுமி, மாப்பிள்ளையும் வேண்டாம், திருமணமும் வேண்டாம் என பிடிவாதமாக மறுத்துவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.