மணமகனின் கை பட்டதால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் - பரபரப்பு சம்பவம்

By Nandhini May 30, 2022 05:23 AM GMT
Report

தட்சிண கன்னடா மாவட்டத்தில், பெல்தங்கடி தாலுகா மூடுகோனஜேவை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், நாராவி பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

இவர்களின் இரண்டு பேரின் திருமணம் கடந்த 25-ம் தேதி நாராவி பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் தடபுடலாக நடக்க இருந்தது. திருமணத்தன்று இருவீட்டை சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் மண்டபத்திற்கு வந்தனர்.

மணமகனும், மணமகளும் மேடையில் அமர்ந்திருந்தனர். அப்போது, தாலிகட்டும் நேரத்தில் சம்பிரதாய முறைப்படி மணமக்கள் மாலையை மாற்றி கொள்ள வேண்டும் என்று புரோகிதர் கூறினார்.

அப்போது, மணமகன் தன் கழுத்தில் இருந்த மாலையை எடுத்து மணமகளின் கழுத்தில் போட்டார். அந்த சமயத்தில் மணமகனின் கை, தவறுதலாக மணமகள் மீது பட்டுவிட்டது.

இதனால் கோபம் அடைந்த மணமகள், தன் கையில் வைத்திருந்த மாலையை தூக்கி வீசி விட்டு, எனக்கு திருமணம் வேண்டாம் என்று மணமேடையை விட்டு வெளியேறினார்.

அதிர்ச்சி அடைந்த மணமகன் வீட்டார், மணமகளின் குடும்பத்தாருடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் திருமண மண்டபம் போர்க்களமாக மாறியது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இருவீட்டாரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். காவல் நிலையத்தில் மணமகனும், மணமகளும் திருமணம் வேண்டாம் என்று கூறியதால் போலீசார் சமாதானம் செய்து இரு வீட்டாரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

மாலை மாற்றும்போது மணமகனின் கை பட்டதால் இளம்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.        

மணமகனின் கை பட்டதால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் - பரபரப்பு சம்பவம் | Bride Stopped The Wedding