தாலி கட்டும் நேரத்தில் நிகழ்ந்த விபரீத சம்பவம் - பலியான மணப்பெண்
ஆந்திராவில் திருமண நாளன்று மணப்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் சிவாஜி என்பவருக்கும் ஸ்ருஜனா என்ற பெண்ணிற்கும் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் பிரம்மாண்ட முறையில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. கடந்த 3 நாட்களாக திருமண சடங்குகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று தாலி கட்டும் நேரத்திற்கு முன்பாக மணப்பெண்ணுக்கு வாழ்த்து கூறும் சடங்கு நடந்தது.
அப்போது திடீரென ஸ்ருஜனா மணமகன் சிவாஜியின் மடியிலேயே மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்ருஜனா இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் என்ன நடந்தது என்று தெரியாமல் குழம்பி போயினர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணையில் இறங்கியது.
இதில் பிரேத பரிசோதனை அறிக்கையில் ஸ்ருஜனா விஷம் அருந்தியதன் காரணமாகவே உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ஸ்ருஜனா அப்பா அளித்த புகாரின் அடிப்படையில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.