சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட லஞ்சம் பெற்ற ஊழியர்கள்....
சென்னை புழல் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட லஞ்சம் பெற்ற ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை புழல் அருகே அரசுக்கு சொந்தமான நகர்புற சமுதாய நல மருத்துவமனை உள்ளது.இங்கு அப்பகுதியைச் சேர்ந்த தினகரன் மற்றும் பிரசாத் என்ற இருவர் மருத்துவமனை ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள்.
இதனிடையே இன்று சென்னை கள்பாளையத்தை சேர்ந்த நந்தகோபால் என்பவர் தனது மனைவியுடன் கொரோனா தடுப்பூசி போட மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.அவரிடம் ஊழியர்கள் இருவரும் தடுப்பூசி அங்கு இருப்பு இல்லை எனவும் , ரூபாய் 500 கொடுத்தால் வெளிச்சந்தையில் இருந்து வாங்கி வந்து செலுத்திக் கொள்ளலாம் என்றும் கூறியதாக கூறப்படுகிறது.
இதனை உண்மை என்று நம்பிய நந்தகோபால் இதுகுறித்து தனது மனைவியிடம் கூறி அவர்களுடைய செல்போன் கணக்கிலிருந்து ஊழியர்களின் வங்கி கணக்கிற்கு ரூபாய் 500 அனுப்பி வைத்துள்ளார்.பின்னர் மேலும் ரூபாய் 300 கொடுக்க வேண்டும் என்றும் ஊழியர்கள் நந்தகோபால் இடம் கேட்டு உள்ளனர். ஆனால் அதற்கு அவர் மறுக்கவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் அருகில் உள்ள தனது நண்பருக்கு தகவல் தெரிவிக்க, அவரும் மருத்துவமனை ஊழியர்களிடம் விளக்கம் கேட்டுள்ளார். அவருக்கும் தகுந்த முறையில் உரிய பதில் தராமல் ஊழியர்கள் வாக்குவாதம் செய்யவே இதுகுறித்து புழல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஊழியர்களிடம் விசாரணை செய்ய அவர்கள் இருவரும் தடுப்பூசி போடுவதற்கு லஞ்சம் பெற முயற்சித்து இருப்பது உறுதியானது . இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஊழியர்கள் இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அரசு மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.