மார்பக விரிவாக்க அறுவை சிகிச்சை - வீடியோ வெளியானதால் அதிர்ந்த பெண்!
மருத்துவமனை ஒன்றில் மார்பக விரிவாக்க அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணின் வீடியோ வெளியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அறுவை சிகிச்சை
சீனாவிலுள்ள ஒப்பனை சார்ந்த அறுவை சிகிச்சை மருத்துவமனை ஒன்றில் பெண் ஒருவர் மார்பக விரிவாக்க அறுவை சிகிச்சை செய்துள்ளார். அடுத்து சில மாதங்களில் அவரின் அறுவை சிகிச்சை வீடியோ டூயினில் என்ற சீன சமூக வலைத்தள பக்கத்தில் வெளியாகியுள்ளது.
இதனை கண்டு அந்த பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அந்த மருத்துவமனையை தொடர்புகொண்டு, வீடியோ எடுத்த நபரை கண்டுபிடித்து வீடியோவை நீக்குமாறும், தன்னிடம் மன்னிப்பு கேட்டு இழப்பீடு வழங்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், இந்த விவகாரத்தை மருத்துவமனை நிர்வாகம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மேலும், "வேறு யாரோ ஒருவரால் இந்த வீடியோ எடுக்கப்பட்டு கசியவிடப்பட்டுள்ளது. சிசிடிவி கண்காணிப்பு காட்சிகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை நீக்கப்படுகிறது.
அலட்சிய பதில்
இதனால் வீடியோவை யார் எடுத்தார் என்பது கண்டுபிடிப்பது சாத்தியமில்லாதது. அந்த வீடியோ மீண்டும் வெளியானால் அதை நீக்க சம்பந்தப்பட்ட சமூக வலைத்தளத்தை தொடர்புகொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளது.
இந்த அலட்சிய பதிலை கேட்டு அதிருப்தியடைந்த பெண், "அந்த வீடியோவில் மருத்துவர்கள், செவிலியர்கள் இருந்தனர். வெளியாட்கள் யாரும் உள்ளே நுழைந்து வீடியோ எடுக்க முடியாது. எனவே, அந்த நபர் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்" என்று மீண்டும் மருத்துவமனையை வலியுறுத்தியுள்ளார்.
இதற்கும், வீடியோ எடுத்த நபர் மருத்துவமனையிலிருந்து வெளியேறிவிட்டார் என்றும், அவர் தொடர்பான தகவல்கள் நீக்கப்பட்டுவிட்டது என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இதனால் விரக்தியடைந்த பெண், அந்த மருத்துவமனை மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.