சச்சினின் சாதனையை தகர்க்கப் போகும் இங்கிலாந்து வீரர் - எதில் தெரியுமா?
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சனின் சாதனை முறியடிக்க இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் இன்னும் 22 ரன்கள் மட்டுமே அடிக்க வேண்டியுள்ளது.
உலகின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் தொடரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 147 ரன்களும், ஆஸ்திரேலியா 425 ரன்களும் எடுத்தன.
278 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி மோசமான தோல்வி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேப்டன் ஜோ ரூட் மற்றும் டேவிட் மாலன் ஜோடி சிறப்பாக விளையாடி அந்த கருத்தை மாற்றியமைத்துள்ளது.
4 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் ஒருநாள் ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இப்போட்டி டிராவில் முடிவடையவே அதிக வாய்ப்புள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் பல்வேறு முக்கிய சாதனைகளை படைத்தார். அவர் தற்போது 158 பந்துகளில் 86 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்த ரன்களுடன் சேர்த்து ஜோ ரூட் இந்தாண்டு மட்டும் 25 இன்னிங்ஸ்களில் 1,541 ரன்களை குவித்துள்ளார். இதன் மூலம் ஒரே ஆண்டில் அதிக ரன்களை குவித்த இங்கிலாந்து வீரர்களின் பட்டியலில் மைக்கேல் வாகனை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.
இதேபோல் இன்னும் 22 ரன்கள் சேர்த்தால் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சனின் சாதனையை அவர் முறியடிக்க வாய்ப்புள்ளது. சச்சின் டெண்டுல்கர் கடந்த 2010 ஆம் ஆண்டு 1,562 ரன்கள் குவித்தார். ரிக்கி பாண்டிங் 2005ம் ஆண்டு 1,544 ரன்களை குவித்தார். இதனை முந்திச்செல்லும் பட்சத்தில் ஜோ ரூட் 5வது இடத்தை பிடிப்பார்.
இந்த பட்டியலில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது யூசஃப் 2006 ஆம் ஆண்டு 1,788 ரன்களை விளாசி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக விவ் ரிச்சர்ட்ஸ் (1,710 ரன்கள்), க்ரீம் ஸ்மித் ( 1,656 ரன்கள்), மைக்கேல் க்ளார்க் ( 1,595 ரன்கள்) ஆகியோர் உள்ளனர்.