பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த பிரேசில் அதிபர் போல்சனாரோ
கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைத்ததற்காக, பிரதமர் மோடிக்கு, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சானாரோ நன்றி தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து போராடும் எனக்கூறியுள்ளார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை பயன்படுத்த சமீபத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் முதல்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
முன்னுரிமை அடிப்படையில் 20 லட்சம் கொரோனாதடுப்பூசிகளை பிரேசிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனக்கூறி அந்நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனைத் தொடர்ந்து, 20 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பிரேசிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதற்கு நன்றி தெரிவித்து ஜெய்ர் போல்சனாரோ, மோடிக்கு நன்றி தெரிவித்து டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: நமஸ்கர்! பிரதமர் மோடி, சர்வதேச நெருக்கடியில் இருந்து கூட்டு முயற்சியின் மூலம் மீள்வதற்கு சிறந்த கூட்டாளியை பெற்றிருப்பதற்கு பிரேசில் பெருமை கொள்கிறது.
இந்தியாவில் இருந்து பிரேசிலுக்கு தடுப்பூசிகளை அனுப்பி வைத்ததற்காக நன்றி. நமஸ்கர்" என்று கூறியுள்ளார். -