2021 ஆம் ஆண்டின் பெஸ்ட் பவுலர் யார் தெரியுமா? - பிரபல முன்னாள் வீரர் வெளியிட்ட தகவல்
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் 2021 ஆம் ஆண்டின் சிறந்த பந்துவீச்சாளர் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு மிகச் சிறந்த ஆண்டாக அமைந்தது என்றே சொல்லலாம். காரணம் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு சர்வதேச டி20 போட்டிகளில் மீண்டும் இடம் பிடித்த அவர் தற்போது நடக்கவுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இடம் பிடித்துள்ளார்.
தான் எப்போதும் சிறந்தவன் என்பதை நிரூபிக்கும் வகையில் 2021 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் 54 விக்கெட்டுகளுடன் அஸ்வின் முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக பாகிஸ்தான் அணியை சேர்ந்த சாகின் அப்ரிடி மற்றும் ஹசன் அலி இருவரும் 47 மற்றும் 41 விக்கெட்டுகள் முறையே எடுத்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளனர்.
களமிறங்கிய அத்தனைப் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி அஸ்வின் அசத்தியிருந்தார். இதனிடையே 2021 ஆம் ஆண்டு மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் குறித்து தனது கணிப்பை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
அதில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கடந்த ஆண்டு நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பந்துவீச்சு இருந்திருக்கிறது. மேலும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் அவர் மீண்டும் இடம் பிடித்திருக்கிறார். ஒரே ஆண்டில் 50 விக்கெட்டுக்கு மேல் எடுப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. அதனை அஸ்வின் செய்து காட்டியிருக்கிறார். வேகப்பந்து வீச்சாளர்கள் பலரிருக்க அஸ்வின் இத்தகைய சவாலை செய்து முடித்து இருப்பது மிகப்பெரிய சாதனையாக நான் பார்க்கிறேன்.
இந்திய துணைக்கண்டம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கலாம். ஆனால் வெளிநாட்டு மைதானங்கள் அப்படி இல்லை. அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு அஸ்வின் நன்றாக செயல்பட்டிருக்கிறார். தற்போது தென்னாப்பிரிக்கா அணியுடனான தொடரிலும் கட்டுப்படுத்தி ஒருசில விக்கெட்டுகளையும் எடுத்திருக்கிறார். ஆகையால் எந்த வித சந்தேகமும் இன்றி கடந்த ஆண்டின் சிறந்த பந்துவீச்சாளராக அவரை கருதுவேன் என்றும், 2021 ஆம் ஆண்டில் 1708 ரன்களை டெஸ்ட் போட்டிகளில் அடித்த ஜோ ரூட், அந்த ஆண்டின் சிறந்த பேட்ஸ்மேனாகவும் தான் தேர்வு செய்துள்ளதாக பிராட் ஹாக் கூறியுள்ளார்.