'என் பெயர் ஃபைசல் இல்ல.. சஞ்சய்" - முஸ்லிம் வேடமணிந்து அண்ணாமலையை புகழ்ந்த இளைஞர்!

Tamil nadu BJP Viral Video K. Annamalai
By Jiyath Dec 13, 2023 08:30 AM GMT
Report

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஆதரித்து பேசிய இஸ்லாமிய இளைஞர் ஒருவர், தற்போது தான் இஸ்லாமியரே இல்லை என்று தெரிவித்துள்ளார்.  

வைரல் வீடியோ 

"இஸ்லாமிய முதல் தலைமுறை வாக்காளர் எடுத்த சபதம்" என்ற பெயரில் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் தொப்பி அணிந்து பேசிய இளைஞர் ஒருவர் தன்னை ஃபைசல் என்று அறிமுகம் செய்து பேசினார்.

அதில், அடுத்த முதலமைச்சராக அண்ணாமலை தான் வரவேண்டும் என அவரை புகழ்ந்து தள்ளியிருந்தார். மேலும், அந்த இளைஞரின் பக்கத்தில் மற்றோரு இளைஞரும் தொப்பி அணிந்து நின்றிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் அந்த இளைஞர் இஸ்லாமியரே இல்லை என்பதும், அவர் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முரளி என்பவரின் மகன் சஞ்சய் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதை அந்த இளைஞரே, தான் ஃபைசல் இல்லை என்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது "என் பெயர் ஃபைசல் இல்லை. என் பெயர் சஞ்சய். எனக்கு நிறைய முஸ்லிம் நண்பர்கள் உள்ளார்கள்.

இளைஞர் விளக்கம் 

அவர்கள் என்னை ஃபைசல் என்று அழைப்பார்கள். மன்னார்குடியில் அண்ணாமலை யாத்திரை நடைபெற்றது. நான் யூடியூப் சேனல் ஒன்றை வைத்து உள்ளேன். அப்போது கண்டெண்ட் கிடைக்கும் என்று நண்பர்கள் அழைத்ததால் நானும் சென்றேன். பின்னர் நண்பர்களின் தொப்பியை எடுத்து போட்டோ எடுத்தேன்.

அங்கு பேட்டி எடுத்துக்கொண்டு இருந்தார்கள். அங்கு நானே விருப்பப்பட்டுத்தான் பேசினேன். அப்போது என் பெயர் சஞ்சய் என்று சொன்னவுடன் உன் பெயர் ஃபைசல் என்று நண்பர்கள் சொன்னார்கள். நானும் அப்படியே சொல்லிப் பேசினேன். தற்போது இது மத பிரச்சனையாகிறது என்று சொன்னார்கள்.

புண்படுத்துவதைப்போல் தெரியாமல் செய்துவிட்டேன். இனி அதுபோன்று செய்ய மாட்டேன். நான் கல்லூரிதான் படித்து வருகிறேன். அந்த வீடியோவை பார்த்து யாரும் தவறாக நினைக்க வேண்டாம். எனக்கு எம்மதமும் சம்மதம்தான்" என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாகி வருகிறது.