கோடை வெப்பத்தை தணிக்க முயன்ற சிறுவன் - கடைசியில் நிகழ்ந்த எதிர்பாரா சம்பவம்
திருப்பத்தூர் அருகே கோடை வெப்பத்தை தணிக்க ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வீட்டின் மேற்கூரை மீது ஏறிதண்ணீர் ஊற்ற முயன்ற சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகேயுள்ள சுண்ணாம்பு காளை பகுதியில் வசித்து வருபம் சனாவுல்லா. என்பவருக்கு 3 பெண் மற்றும் 1 ஆண் என 4 பிள்ளைகள் உள்ளனர். இதில் சனாவுல்லா மற்றும் அவரது மகன் முகமது ஜக்கரியா பெங்களூரில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வரும் நிலையில் தற்போது ரம்ஜான் நோன்பு காலம் தொடங்கியதால் இருவரும் பெங்களூரில் இருந்து ஆம்பூருக்கு வந்துள்ளனர்.
இதனிடையே கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக வாட்டி வதைத்து வரும் கோடை வெயிலால் கூரை வீடுகள் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வீடுகளில் வசிக்கக்கூடிய மக்கள் வெப்பத்தின் தாக்கத்தால் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் முகமது ஜக்கரியா தாங்கள் குடியிருக்க கூடிய ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வீட்டின் மேல் கூரை மீது ஏறி வெப்பத்தை குறைப்பதற்காக தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது வீட்டின் மேலே சென்ற மின்சார கம்பி முகமது ஜக்கரியா மீது உரசியதில் அவர் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார், இதில் தலை மற்றும் முகம் முழுவதும் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் நகர காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.