விமானத்தில் சிறுவன் செய்த சேட்டை; பதறிய விமானி - அலறிய பயணிகள்!
விமானத்தில் 17 வயது சிறுவன் அவசரகால கதவை திறக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அவசரகால கதவு
சென்னை விமான நிலையத்திலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று கொல்கத்தாவுக்கு புறப்பட தயாரானது. இந்த விமானத்தில் 157 பயணிகள் இருந்தனர். விமானம் ஓடுபாதைக்கு செல்ல தயாராகிக்கொண்டு இருந்தபோது, அவசரகால கதவு திறக்கப்படுவதாக எச்சரிக்கை அலாரம் விமானி கேபினில் ஒலித்தது.
உடனடியாக தலைமை விமானி சென்று அவசரகால கதவை திறக்கும் பட்டனை அழுத்தியது யார் என்பதை விசாரித்தார். அப்போது, திரிபுரா மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் பட்டனை அழுத்தியது தெரியவந்தது.
விமானம் தாமதம்
அந்த சிறுவன், தான் முதல்முறையாக விமானத்தில் பயணம் செய்வதாகவும், அவசர கால கதவுக்கான பட்டனை மறைத்து ஒட்டப்பட்டு இருந்த பிளாஸ்டிக் ஸ்டிக்கரை தெரியாமல் கிழித்துவிட்டதாகவும் கூறினார்.
இதனை தொடர்ந்து உடனடியாக அந்த சிறுவனை விமானத்திலிருந்து கீழே இறக்கி, விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் சிறுவனை எச்சரித்து அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த விமானம் சுமார் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.