வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த சிறுவன் பலி: கிருஷ்னகிரியில் சோகம்
கிருஷ்ணகிரி அருகே மழையால் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த 7 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் அடுத்த தளிஅள்ளி ஊராட்சி கோவிலூரை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது 7 வயது மகன் முகிலன். இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 2அம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், காவேரிபட்டினம் பகுதியில் கடந்த திங்கட்கிழமை பெய்த கனமழை காரணமாக, பல்வேறு இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதேபோல், கோவிலூர் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மின்கம்பி ஒன்று அறுந்து கிடந்தது. அந்த நேரத்தில் வயலுக்கு சென்ற சிறுவன் எதிர்பாராத விதமாக அந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இதனையடுத்து மின் ஊழியர்களின் அலட்சியத்தால் சிறுவன் இறந்துள்ளதாக கூறிய அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் 50 க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர். பிறகு அவர்களை சமாதானப்படுத்திய போலீசார் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.