தந்தை முடிவெட்டும்படி கண்டித்ததால் ஆத்திரம் - ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த சிறுவன்
தந்தை முடிவெட்டும்படி கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த சிறுவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் ஊராட்சி சூ.பள்ளிப்பட்டு பகுதியில் வசிப்பவர் சீனிவாசன். இவருக்கு 16 வயதில் ஸ்ரீராம் என்ற மகன் இருக்கிறார். இவர் திருப்பத்தூர் அடுத்த குனிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்றைய தினம் சீனிவாசன், மகன் ஸ்ரீ ராமிடம் தலையில் முடி அதிகமாக உள்ளது அதைப்போய் வெட்டிக் கொண்டு வா என்று கூறியுள்ளார்.
இதனை காதில் வாங்கிக் கொள்ளாமல் மகன் அலட்சியப்படுத்தியதால் கோபமடைந்த தந்தை சீனிவாசன் ஸ்ரீராமை அடித்து கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீராம் இன்று அதிகாலை அதே பகுதியின் அருகாமையில் இருக்கும் ரயில்வே இருப்புப் பாதைக்கு சென்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்பு ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் ஸ்ரீராமின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீராம் நேற்றைய தினமே இரண்டு மூன்று முறை அருகாமையில் உள்ள ரயில்வே இருப்புப் பாதைக்கு சென்று தற்கொலை செய்ய முயற்சி செய்து பின்பு பெற்றோர்களால் மீட்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.