ஆசிட் கலந்த குளிர்பானம் குடித்த சிறுவன் உயிரிழப்பு : கன்னியாகுமரியில் பரபரப்பு
கன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்மல் பகுதியைச் சேர்ந்தவர் சுனில், இவரது 11 வயது மகன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 3 ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சிறுவன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
குளிர்பானத்தில் ஆசிட்
அப்போது சிறுவனை விசாரித்ததில் , அந்த பள்ளியைச் சேர்ந்த அடையாளம் தெரியாத மாணவர் அளித்த குளிர்பானம் குடித்ததும், அதன் பிறகு உடல்நிலை பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து சிறுவன் உடனடியாக மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுவனுக்கு வாயில் புண் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக அவர் கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
போலிஸ் விசாரணையில் தகவல்
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் குடித்த குளிர்பானத்தில் ஆசிட் கலந்து இருப்பதை கண்டுபிடித்தனர்.
குளிர்பானத்தை குடித்ததால் சிறுவனின் இரண்டு சிறுநீரகங்களும் சேர்ந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக கேரளா மாநிலம் நெயாத்தங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுவன் அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றுசிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது