செஞ்சூரியன் போட்டியில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக அசத்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா!

bhumra magical moments against south africa
By Swetha Subash Dec 30, 2021 11:14 AM GMT
Report

ஒரு காலத்தில் வெளிநாட்டு தொடரில் இந்தியா ஒரு டெஸ்ட் போட்டியை வென்றாலே சாதனை தான் ஆனால் இன்று இந்திய அணி எங்கு சென்றாலும் வெற்றியை நிலை நாட்டுகிறது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மண்ணில் தொடரையே கைப்பற்றுகிறது. இந்தியாவின் இந்த மாறுதலுக்கு முக்கிய காரணம் வேகப்பந்துவீச்சு தான்.

ஒரு காலத்தில் இந்தியாவின் வேகப்பந்துவீச்சை பார்த்து கிண்டல் செய்தவர்கள் இன்று மிரண்டு போய் விட்டனர். இந்திய வேகப்பந்துவீச்சில் இந்த சிறந்த மாற்றத்திற்கு காரணம் அப்போதைய பயிற்சியாளர் பாரத் அருண் தான்.

அவரது பட்டறையில் பட்டை தீர்த்தப்பட்ட தங்கம் தான் பும்ரா, 25 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 106 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் பும்ரா.

இதில் இந்தியாவில் அவர் வீழ்த்தியது வெறும் 4 விக்கெட் தான். மற்ற அனைத்து 102 விக்கெட்டுகளும் ஆசியாவிற்கு வெளியே தான்.

எப்போது எல்லாம் இந்தியா விக்கெட்டை வீழ்த்த முடியாமல் திணறுகிறதோ, அப்போதெல்லாம் விராட் கோலி இவரை தான் பந்துவீச்சை அழைப்பார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் இதை தான் விராட் கோலி செய்தார்.

305 ரன்கள் என்ற இலக்கை தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் தைரியமாக எதிர்கொள்ள, அவர்களை பயமுறுத்த கோலி பும்ராவை அழைத்தார்.

தென்னாப்பிரிக்கா 73 ரன்களுக்கு 2 விக்கெட் எடுத்த நிலையில், பும்ரா தனது மேஜிக் பந்துவீச்சால் வெண்டர்டுசனை ஆட்டமிழக்க வைத்தார்.

இதே போன்று ஆட்டத்தின் கடைசி பந்திலும் கேசவ் மகராஜ்க்கு பும்ரா வீசிய பந்தை எந்த கொம்பனாலும் எதிர்கொண்டிருக்க முடியாது.

யாக்கர் கிங் பும்ரா வீசிய பந்து எப்படி ஸ்டம்பை பதம் பார்த்தது என்று யாருக்குமே தெரியவில்லை. இதே போன்று தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கார் 77 ரன்கள் எடுத்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

அப்போது பும்ரா அவரை பொறி வைத்து எலியை பிடிப்பது போல் ஆட்டமிழக்க வைத்தார். முதல் மூன்று பந்துகளை ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசினார்.

இதனால் 4வது பந்தையும் அவர் ஆப் ஸ்டம்ப் லைனில் பந்தை எதிர்பார்த்த போது, அவரது பேடை குறிவைக்க, அவர் எல்.பி.டபிள்யூ ஆனார்.