காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!
காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு வாட்ஸ் ஆப் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த காங்கிரஸ் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
வெடிகுண்டு மிரட்டல்
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் நெல்லை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை மாநாடு இன்று நடைபெறுகிறது.
இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்துள்ளார். அவருக்கு நாங்குநேரியில் வரவேற்பு அளிக்க அக்கட்சியினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
இந்நிலையில் மூன்றடைப்பு பகுதிக்கு அருகே அ.சாத்தான்குளம் கிராமத்தைச் சார்ந்த நாங்குநேரி வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் அன்பு ரோஸ் என்பவர் திசையன்விளை கூட்டத்திற்கு கே.எஸ்.அழகிரி வரும்பொழுது வெடிகுண்டு வெடிக்கும் என்று தனது வாட்ஸ் அப் குரூப்பில் பதிவிட்டுள்ளார்.
கைது செய்த போலீசார்
இதனைத்தொடர்ந்து நாங்குநேரி வட்டார காங்கிரஸ் தலைவர் முத்துகிருஷ்ணன் என்பவர் மூன்றடைப்பு பகுதி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் அன்பு ரோஸ் மீது மூன்றடைப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் தலைவருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.