முதல்வர் பிறந்தநாளன்று தலைமை செயலகத்தில் வெடிகுண்டு; மர்மநபர் மிரட்டல் -அதிரடி சோதனை!
சென்னை தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மர்மநபர் மிரட்டல்
தமிழக அரசின் தலைமைச் செயலகம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்படுகிறது. இச்செயலகத்தில்தான் தமிழக அரசின் செயல்பாடுகள் தொடங்குகின்றன.
இந்நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், முடிந்தால் கண்டுபிடித்து எடுத்துக் கொள்ளுமாறு மிரட்டல் விடுத்து அழைப்பை துண்டித்து உள்ளார்.
இந்த தகவலின் அடிப்படையில் செயலகம் முழுவதும் மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள், வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவி உள்ளிட்டவைகளை தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.
தீவிர சோதனை
மேலும், செயலகத்தில் உள்ள அமைச்சர்கள் அறைகள், அதிகாரிகளின் அறைகள் , சட்டப்பேரவை அரங்கம், வாகன நிறுத்தமிடங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மோப்பநாய்களை கொண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.
உதவி ஆணையர் தலைமையில் பல குழுக்கள் தீவிரமாக சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மிரட்டல் உண்மையா? புரளியா? என்ற கோணத்தில் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது முதல்வரது பிறந்தநாளன்று தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.