திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெடிக்குண்டு மிரட்டல்!
திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அங்கு சோதனை தீவிரப்படுத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
வாட்ஸ்அப் கணக்கு வழியாக மிரட்டல்
திருச்சி பன்னாட்டு விமான நிலைய மேலாளரின் வாட்ஸ்அப் கணக்கில், செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் வெள்ளிக்கிழமை காலை விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும், வெடிகுண்டுகளும் கொண்டுவரப்படுவதாக அந்த மிரட்டல் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கும் வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தீவிர சோதனை மேற்கொண்ட போதும், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
விமான நிலையத்தில் பரபரப்பு
இந்நிலையில் மிரட்டல் வந்த வாட்ஸ்அப் கணக்கின் மூலம் விசாரணை மேற்கொண்டபோது, சென்னையை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட சங்கீதா என்பவர் மிரட்டல் விடுத்தார் என்பது தெரியவந்துள்ளது.
இனி இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் அவர் விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திடீர் வெடிகுண்டு சோதனை காரணமாக திருச்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.