‘திருமண ஊர்வலத்தில் வெடித்த வெடி’ - சிதறி ஓடிய பொதுமக்கள்.. ஒருவர் பலி
கேரளாவில் கல்யாண ஊர்வலத்தில் வெடிக்கப்பட்ட வெடியால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கண்ணூரில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு திருமண விழாவில் நடந்த இசை நிகழ்ச்சியில் திருமண வீட்டில் இருந்தவர்களுக்கும், அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மோதல் நிகழ்ந்துள்ளது. இதனிடையே திருமண நிகழ்ச்சிகள் முடிந்து நேற்று புதுமணத் தம்பதிகளின் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ஒரு கும்பல் வேனில் வந்திறங்கி திடீரென திருமண வீட்டில் வெடி குண்டுகளை வீசினர். 2 குண்டுகள் வீசப்பட்டதில் ஒரு குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.
குண்டு வெடித்ததும் திருமண வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்த நிலையில் ஜிஸ்ணு என்ற வாலிபர் உடல் சிதறி அந்த இடத்திலேயே பலியானார். இதனையடுத்து குண்டு வீசிய கும்பல் மீண்டும் வேனில் ஏறி தப்பி சென்று விட்டனர்.
இதனைத் தொடர்ந்து திருமண வீட்டில் இருந்தவர்கள் ஜிஸ்ணுவின் உடலுடன் அந்த பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடமே பதற்றமும், பதட்டமும் அடைந்தது.
தகவலறிந்து கண்ணூர் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சு நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு திருமண வீட்டில் குண்டு வீசிய கும்பலை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.