கேரளாவை உலுக்கிய குண்டு வெடிப்பு சம்பவம் - முதல்வர் பினராயி விஜயன் நேரில் ஆய்வு!
கேரளாவில் தொடர் குண்டுவெடிப்பு நடந்த இடத்தை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் நேரில் ஆய்வு செய்தார்.
குண்டு வெடிப்பு
கேரள மாநிலம் எர்ணாகுளம், களமசேரியில் நேற்று நடந்த கிறிஸ்தவ கூட்டத்தில் 3 முறை தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் கேரளா மாநிலத்தையே உலுக்கியது. உடனே, போலீசார், தீவிரவாத ஒழிப்பு படையினர் மற்றும் என்ஐ அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கினர். இதற்கிடையில், டொமினிக் மார்ட்டின் என்பவர் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று போலீசில் சரணடைந்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
முதல்வர் நேரில் ஆய்வு
இந்நிலையில் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதனையடுத்து அந்த சம்பவம் குறித்து கேரள மாநில போலீசார், தேசிய பாதுகாப்பு படையினர், என்ஐஏ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், வேறு ஏதேனும் சதித் திட்டம் உள்ளதா? என்பது குறித்து, தீவிர விசாரணை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவுரை வழங்கினார்.