குண்டு வீசிய ரஷ்யா - உக்ரைனில் போர் பதற்றம்?
ரஷ்யா உக்ரைன் போர் பதற்றம் உள்ள நிலையில் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டைனிஸ்டியா லுகன்ஸ்கா என்ற நகரில் உள்ள ஒரு கிராமத்தில் குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைய கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா அந்நாட்டின் எல்லையில் வீரர்கள், ஆயுதங்களை குவித்துள்ளது.
இதையடுத்து, உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கா, நேட்டோ அமைப்பின் உறுப்பினர் நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை போர் விமானங்கள்,கப்பல்கள், படைகளை அனுப்பி வருகின்றன.
இந்நிலையில், உக்ரைன் டான்பஸ் மாகாணத்தில் ஸ்டைனிஸ்டியா லுகன்ஸ்கா என்ற நகரில் அடுத்தடுத்து குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இந்த தாக்குதல் அங்குள்ள மழலையர் பள்ளியில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இதன் காரணமாக அந்த கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த இந்த மாகாணத்தில் ஒரு பகுதி உக்ரைனின் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.
ஆகையால் இந்த தாக்குதலை யார் நடத்தியது என முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் இதனை ரஷியாவே நடத்தியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் ரஷ்யா மீது பதிலடி தாக்குதல் நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.