மாணவர்களிடையே தகராறு...கல்லூரியில் வெடிகுண்டு வீச்சு..சென்னையில் பரபரப்பு
சென்னை வேளச்சேரியிலுள்ள குரு நானக் கல்லூரியில் மாணவர்களுக்கிடையேயான தகராறில் கல்லூரி வளாகத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களுக்கிடையேயான தகராறு
சென்னையின் மிக பிரபலமான கல்லூரிகளில் ஒன்று குரு நானக் கல்லூரி. வேளச்சேரியில் அமைந்துள்ள இந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் இருதரப்பு மாணவர்களுக்கிடையே யார் பெரியவர் என்ற தகராறு ஏற்பட்டுள்ளது.
பல சமயங்களில் இரு வேறு பாடப்பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கிடையே ஏற்பட்டு வந்த இந்த தகராறு தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. தொடர்கதையான இதில், இன்று மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
வெடிகுண்டு வீச்சு
அந்த தகராறில், ஒரு தரப்பு மாணவர்கள் நாட்டு வெடி குண்டுகளை வீசியதாக சொல்லப்படுகிறது. பலத்த சத்தத்துடன் வெடித்ததால் கல்லூரியில் மாணவர்கள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக கல்லூரி நிர்வாகம் கிண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளது.
இந்த புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார், சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். வீசப்பட்டது நாட்டு வெடிகுண்டு தானா? என கண்டறிய ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் நான்கு மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். அதே நேரத்தில் தற்போது வரை வீசப்பட்டது நாட்டு வெடிகுண்டு தான் என கூறப்படுகிறது.