சசிகலா திடீரென போயஸ் கார்டன் வருகை.! பின்னணி என்ன?
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்து கடந்த பிப்ரவரி மாதம் விடுதலையானார் சசிகலா. இதனையடுத்து, சென்னைக்கு வந்து சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், தி.நகரில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். பின்னர், மார்ச் 3ம் தேதி அரசியலை விட்டு விலகுகிறேன் என்று அதிரடியாக அறிவித்தார் சசிகலா.
இது அவரது ஆதரவாளர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இதனைத் தொடர்ந்து சசிகலா பொதுவெளியில் அதிகம் தலைகாட்டவில்லை. தினமும் தலைப்பு செய்திகளில் இடம் பெற்று பரபரப்பை ஏற்படுத்திய சசிகலா ஆன்மீகத்தை நாடி கோவில்களுக்கு சென்று வரும் செய்திகள் அவ்வப்போது வெளியாகி வந்தன.
திருவிடைமருதூர் சிவன் கோயில் குருக்கள் சொன்ன ஆலோசனையின்படி, கடந்த 17ம் தேதி திடீரென்று தஞ்சாவூர் சென்ற சசிகலா குலதெய்வத்தை வணங்கினார். கணவர் நடராஜனின் சகோதரர்கள் குழந்தைகளின் காதுகுத்து விழாவில் பங்கேற்றார். அதன் பின்னர் கணவர் நடராஜன் சமாதிக்கு சென்று வணங்கினார். 19ம் தேதி காலை சென்னை திரும்பிய சசிகலா போயஸ் கார்டனுக்கு சென்று விநாயகர் கோயிலில் தரிசனம் செய்தார்.
பின்னர், ஜெயலலிதாவுடன் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் அரசு நினைவு இல்லமாக மாற்றப்பட்டுவிட்டதால் மக்களுக்கு பார்வையிட அனுமதி இல்லை. இதனால், சசிகலாவால் அங்கு போகமுடியவில்லை.

பின்னர், வேதா நிலையம் இல்லத்தை பார்த்தபடியே பின்பக்கம் சென்று சிவன் கோயிலில் தரிசனம் செய்தார் சசிகலா, அருகிலேயே தனக்காக கட்டப்பட்டு வரும் புதிய பங்களாவை பார்வையிட்ட அவர், உள்ளே சென்று பார்க்காமல் வெளியே நின்று பார்த்தபடியே காரில் ஏறி தி.நகரில் உள்ள இல்லத்திற்கு சென்றார்.