12 நாட்களுக்குப் பின் பிணமாக மீட்கப்பட்ட பிரபல பாடகி - ரசிகர்கள் அதிர்ச்சி
ஹரியானாவில் காணாமல்போன பாடகி சங்கீதா சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சங்கீதா என்பவர் அரியான்வி மொழிப் பாடகியாக இருந்து வந்தார். டெல்லியில் வசித்து வந்த அவரை திடீரென காணவில்லை என கடந்த மே 11 ஆம் தேதி அவரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சங்கீதாவை கடந்த 12 நாட்களாக தீவிரமாக தேடி வந்தனர்.

இதற்கிடையில் அம்மாநிலத்தில் உள்ள பைனி பைரன் என்ற கிராமத்தில் ஒரு பெண்ணின் உடல் புதைக்கப்பட்ட நிலையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் சடலமாக மீட்கப்பட்ட அந்த பெண் தான் பாடகி சங்கீதா என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து கொலை மற்றும் ஆள் கடத்தல் தொடர்பான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹரியானாவை சேர்ந்த ரவி மற்றும் ரோகித் என்ற இருவரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இசை வீடியோ எடுப்பதாக கூறி சங்கீதாவை வரவழைத்து திட்டமிட்டு கொலை செய்ததை இருவரும் ஒப்புக் கொண்டனர்.
குற்றவாளிகள் சங்கீதாவை கழுத்தை நெரித்துக் கொன்றதாக ஹரியானா காவல்துறையினர் தெரிவித்துள்ள நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனை செய்த பிறகு இந்த வழக்கு டெல்லி காவல்துறைக்கு மாற்றப்படும் என்று கூறியுள்ளனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.