கங்கை நதியில் சடலங்களை எரித்த காவலர்கள் பணியிடை நீக்கம்
உத்தரப்பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை எரித்த 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதனிடையே உத்தரப்பிரதேசம் மாநிலம் பல்லியா அருகே மால்தேபூர் கிராமத்தில் கங்கை ஆற்றில், இறந்தவர்களின் உடல் மிதந்து வந்துள்ளது. அதை கைப்பற்றிய போலீசார், சட்டமுறைப்படி செயல்படாமல், தாங்களாகவே இறந்த உடலை எரியூட்டி தகனம் செய்துள்ளனர். இதற்காக இறந்தவரின் உடலை ஒரு டயரில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.
இதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ தற்போது 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக கங்கை நதிக்கரையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அப்படியே விட்டுச் செல்வது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.