" மாப்பிள்ளைக்கு அவ்வளவு வெறி" - காலில் ரத்தம் சொட்ட சொட்ட பந்து வீசிய ஆண்டர்சன்..!
இந்திய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் காலில் ரத்தம் சொட்ட சொட்ட ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீசிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது.
தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. இதனிடையே இப்போட்டியின் 42வது ஓவரின் போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சனின் முழங்கால் பகுதியில் இருந்து ரத்தம் கொட்டியது.
ரத்தம் அதிமாக வந்ததால் அவர் அந்த ஓவரை பாதியிலேயே நிறுத்திவிட்டு முதலுதவி எடுக்க செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது, இதனையே இங்கிலாந்து வீரர்களும் ஆண்டர்சனிடம் வலியுறுத்தினார்கள். ஆனால் ஆண்டர்சனோ அந்த ஓவர் முழுவதையும் வீசி முடித்தார்.
இதன் வீடியோ மற்றும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ஆண்டர்சின் கடமை உணர்ச்சியை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
ஏற்கனவே காயத்தால் அவதிப்பட்டு வந்த ஆண்டர்சனை இந்த தொடரில் ஸ்டூவர்ட் பிராட் போன்ற முக்கிய வீரர்கள் விலகியதால் இங்கிலாந்து அணி ஓய்வு கொடுக்காமல் தொடர்ந்து விளையாட வைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.