20 மாகாணங்களில் அவசர நிலை: அமெரிக்கா, கனடாவை தாக்கும் கடும் பனிப்புயல்
அமெரிக்கா மற்றும் கனடாவில் வீசியுவரும் கடும் பனிப்புயலால் சுமார் 18 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
20 மாகாணங்களில் அவசர நிலை
தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் மோசமான வானிலை காரணமாக பல்வேறு நாடுகளுக்கான விமான சேவைகள் முடங்கியுள்ளன. தெற்கு ராக்கி மலைத்தொடர் முதல் நியூ இங்கிலாந்து வரை இதுவரை இல்லாத அளவில் கடும் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. உட்பட 20 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட பனிப்புயலில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

நியூயார்க் நகரம் முழுவதும் பனிப்புயல் வீசியதால் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் பனிக்கட்டியில் புதைந்தன. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களுக்காக தற்காலிக முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.
சாலைகளை சீரமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஓக்லஹோமா மாகாணத்தின் பல பகுதிகள் வெண்பனியால் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்து முற்றிலும் முடங்கிய நிலையில், ஊழியர்கள் சாலைகளை சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நியூ ஜெர்சி மாகாணத்தில் பனிப்புயல் தாக்கம் குறைந்து, மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதேபோல் வடகிழக்கு மாகாணங்களின் பல நகரங்களிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, மைனே மாகாணத்தில் மோசமான வானிலை காரணமாக தனியார் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பனிப்புயல் தற்போது தென்கிழக்கு கனடா நோக்கி நகர்ந்துள்ளது.
டொராண்டோ நகரில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கியூபெக் புறநகர் பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. விமானம் மற்றும் சாலை போக்குவரத்தும் முழுமையாக முடங்கியுள்ளது.