கொரோனா பாதித்து குணமடைந்த பின் வரும் கருப்பு பூஞ்சை என்றால் என்ன? யாரை பாதிக்கும்?

Corona Vaccine Black Funges
By Mohan May 15, 2021 01:52 PM GMT
Report

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமாகி திரும்புபவர்களுக்கு அதற்குப் பிறகான பாதிப்புகள் அதிகரித்து வருவதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

கருப்பு பூஞ்சை என்றழைக்கப்படும் மியூகோர்மைகோஸிஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, கோவிட்-19 மற்றும் அதன் சிகிச்சை காரணமாக உயர்ந்து வருகிறது என எய்ம்ஸ் தலைவர் ரந்தீப் குலேரியா கூறியுள்ளார்.

இந்த நோய் ஏற்பட்டுள்ள 23 பேரில் 20 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எனவும் சில மாநிலங்களின் 400 முதல் 500 பேருக்கு இந்த தொற்று உள்ளது எனவும் கூறியுள்ளார். இந்த பூஞ்சையின் வித்துகள் காற்று, மண் மற்றும் உணவுகளிலும் இருக்கும். ஆனால் இதன் வீரியம் குறைவாகவே இருக்கும்.

கொரோனா சிகிச்சையில் எடுக்கும் மருந்துகளால் இந்த நோய் தற்போது அதிகமாகியுள்ளது என மருத்துவர் குலேரியா கூறுகிறார். மேலும் கொரோனா சிகிச்சைக்காக கொடுக்கப்படும் ஸ்டெராய்டுகளை தவறாக பயன்படுத்துவதாலும் இந்த கருப்பு பூஞ்சை அதிகமாகிறது.

நீரழிவு நோய் உள்ளவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஸ்டெராய்டுகள் எடுத்துக்கொண்டால் இந்த கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் , ”இந்த நோயை தற்போது கட்டுப்படுத்துவது மிக முக்கியமான ஒன்றாகும். அதற்கு ஸ்டெராய்டுகளை தவறாக பயன்படுத்தாமல் இருந்தாலே போதும். இந்த கருப்பு பூஞ்சை முகம், மூக்கு, கருவிழி மற்றும் மூளையை பாதிக்கும், இதனால் பார்வை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

கொரோனா பாதித்து குணமடைந்த பின் வரும் கருப்பு பூஞ்சை என்றால் என்ன? யாரை பாதிக்கும்? | Black Fungus Infection Among Covid Recovered

மேலும் இது நுரையீரலையும் பாதிக்க வாய்ப்புள்ளது. கொரோனாவால் இறப்பவர்களை விட இது போன்ற பூஞ்சை மற்றும் பேக்டீரியா தொற்றால் இறப்பவர்களே அதிகம் உள்ளனர். அதனால் மருத்துவமனையில் கொரோனா காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மியூகோர்மைகோஸிஸ் என்றால் என்ன? இயற்கையிலேயே சுற்றுசூழலில் இருக்கும் ஒரு வித பூஞ்சையே மியூகோர்மைகோஸிஸ். பொதுவாக இது நம் உடலினுள் செல்லும்போது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி இதனுடன் போராடி வெல்லும்.

ஆனால் கொரோனா சிகிச்சையில் எடுக்கும் ஸ்டேராய்டுகள் நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடுவதால் இந்த பூஞ்சை நம் உடலுக்குள் வந்து பரவத் தொடங்குகிறது.

யாரை பாதிக்கும்?

தீவிரமான நீரழிவு நோய் உள்ளவர்கள், ஸ்டெராய்டுகளால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், நீண்ட நாட்களாக ஐசியூவில் அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லது மருத்துவமனைகளில் இருப்பவர்கள், உறுப்பு மாற்றம் அறுவை சிகிச்சை செய்தவர்கள் போன்றோர்க்கு இந்த நோய் ஏற்படும்.

அறிகுறிகள்:

தோல் நோய் ஏற்படுவது, பின் தலையில் கொப்புளங்கள், கண், மூக்கு, வாயில் தொற்று ஏற்படுவது, இரட்டை பார்வை அல்லது பார்வை மங்குதல், நெஞ்சுவலி, மூக்கு துவாரத்தில் கருப்பு படர்தல், மூச்சு திணறல் மற்றும் இருமும்போது ரத்தம் வருதல் ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும்.

சிகிச்சைக்கு 4 முதல் 6 வாரம் வரை பூஞ்சை அளிக்கும் மருந்துகளை எடுத்து கொள்ளலாம். ஆனால் அது உடலின் எந்த உறுப்பை பாதித்து இருக்கிறதோ அந்த உறுப்பின் நிபுணர்களை வைத்து பார்க்க வேண்டும். தொற்று ஏற்பட்டிருக்கும் செல்களை நீக்குவது சிகிச்சையின் இன்னொரு முறை. இதில் உடல் உறுப்புகளை இழக்கும் அபாயம் இருக்கும்.