சீனா :132 பயணிகளுடன் மலையில் மோதி விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுப்பிடிப்பு
சீனாவில் 132 பயணிகளுடன் மலையில் மோதி விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவின் ‘சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737-800 ரக விமானம் கடந்த 21-ந் தேதி பகல் அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து 123 பயணிகள் 9 பணியாளர்கள் என மொத்தம் 132 பயணிகளுடன் புறப்பட்டது.
குவாங்சு நோக்கி சென்ற அந்த விமானம் அந்நாட்டின் ஷூவாங் மாகாணம் டென்ஜியான் கவுண்டிக்கு உட்பட்ட வுசோ என்ற நகரின் அருகே உள்ள மலைப்பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது.
விமானம் மலைப்பகுதியில் மோதி நொறுங்கி விபத்துக்குள்ளாகியதில் மளமளவென தீப்பற்றி எரிந்தது.
மேலும், மீட்பு பணிகள் இரண்டு நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற நிலையில் விமானத்தில் பயணித்த யாரும் உயிருடன் மீட்கப்படாததால் 132 பேரும் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியானது.
எனினும் விமானம் விபத்துக்குள்ளான காரணம் அறியப்படாமல் இருந்தது. இதனை தொடர்ந்து விமானத்தின் கருப்புப்பெட்டிகளை தேடும் முயற்சி முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில்,
விமானத்தில் இருந்த இரண்டு கருப்பு பெட்டிகளில் ஒரு கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விமானிகளின் உரையாடல்கள், விமானத்தின் பதிவுகள் ஆகியவை கருப்பு பெட்டியில் பதிவாகி இருக்கும் என்பதால் அதன்மூலம் விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிய முடியும்.
இந்நிலையில் விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளான காரணம் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.