பாஜகவின் பண பலம் எடுபடவில்லை.. கனவு பலிக்கவில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இந்த மகத்தான வெற்றியை முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு காணிக்கையாக்குகிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
மக்களவை தேர்தல்
2024 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகிறது. இந்த தேர்தலில் தமிழகத்தில் 40-க்கு 40 இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "கடந்த முறை 39 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில் இந்த முறை 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். 400 இடங்கள் என்று கூறிய பாஜகவுக்கு ஆட்சியமைக்க போதுமான தொகுதிகள் கிடைக்கவில்லை. பாஜகவின் பண பலம் எடுபடவில்லை.
காணிக்கை
பாஜகவின் கனவு பலிக்கவில்லை. திமுக கூட்டணி 40 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. தேர்தலில் முடிவுகள் முழுமையாக வெளியான பிறகு இந்திய ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் காக்கத் தேவையான அரசியல் செயல்பாடுகளை திமுக தொடர்ந்து முன்னெடுக்கும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா ஆண்டு நடந்துகொண்டிருக்கிறது. மக்களவை தேர்தல் வெற்றியை அவருக்கு காணிக்கையாக்குவோம் என்று சொல்லியிருந்தோம். இந்த மகத்தான வெற்றியை அவருக்கு காணிக்கையாக்குகிறோம்" என்று தெரிவித்துள்ளார்