முஸ்லிம்களின் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் - பாஜக பெண் வேட்பாளர் சர்ச்சை பேச்சு!
முஸ்லிம்களின் சான்றிதழ்களை சரிபார்க்க அரசை வலியுறுத்துவேன் என பாஜக வேட்பாளர் மாதவி லதா கூறியுள்ளார்.
பெண் வேட்பாளர்
நடப்பாண்டில் மக்களவை தேர்தலில் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் தொகுதியில் பாஜக வேட்பாளராக மாதவி லதா போட்டியிடுகிறார்.
அண்மையில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, தெலங்கானா மாநிலம் மெட்சல் மாவட்டத்தில் உள்ள செங்கிசெர்லா கிராமத்தில் வசிக்கும் முஸ்லிம்களின் சான்றிதழ்களை சரிபார்க்க மத்திய அரசை அணுகி வலியுறுத்துவேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் செங்கிசேர்லாவில் முஸ்லிம் குடும்பங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
சர்ச்சை பேச்சு
அதுகுறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். ஏனெனில், செங்கிசேர்லாவில் உள்ளவர்களிடம் போலி ஆதார் அட்டைகள் உள்ளிட்ட பிற ஆவணங்கள் உள்ளன. இவர்கள் அனைவரும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு குடியேறினர்.
கிராமத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடிய இந்து பெண்களை முஸ்லிம்கள் தாக்கினர் என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்துக்களை தாக்கி கிராமத்தில் இருந்து வெளியேற்ற சதி நடக்கிறது. இதனால் தான் சிஏஏ தேவை. ஹோலி பண்டிகையின் போது இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த வழக்கை நீர்த்துப்போகச் செய்வதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சிறிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஹைதராபாத் பாஜக பெண் வேட்பாளரான மாதவி லதாவின் சர்ச்சைக்குரிய கருத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.