ஒரு சீட் ஜெயித்தாலே அதிசயம்...! அண்ணாமலையை தொடர்ந்து சீண்டும் எஸ்.வி.சேகர்...!
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து தொடர்ந்து தன்னுடைய விமர்சனத்தை வைத்து வருகின்றார் எஸ்.வி.சேகர்.
ஒரு சீட் ஜெயித்தாலே..
அதன் நீட்சியாக தற்போது நாடாளுமன்ற தேர்தலை வைத்து மீண்டும் அண்ணாமலையை விமர்சனம் செய்துள்ளார் எஸ்.வி.சேகர். திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் நாடாளுமன்ற தேர்தல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவார் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஆனால் அண்ணாமலையின் பங்கு அதில் பூஜ்ஜியமாக தான் இருக்கும் என்று விமர்சனம் செய்த எஸ்.வி.சேகர், குழந்தைத்தனமாக அண்ணாமலை செயல்பட்டு வருகிறார் என்றார்.அவரின் நடைபயணத்தால் எந்த பயனும் இல்லை என்ற எஸ்.வி.சேகர், எப்போதும் கூட்டம் ஓட்டாக மாறாது என்று சுட்டிக்காட்டினார்.
திட்டமிட்டு தான் அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி கூடாது என்பதில் செயல்பட்டு வந்தார் என்றும் அதன் பலனை இந்த தேர்தலில் பார்ப்பார் என்ற எஸ்.வி.சேகர், தமிழகத்தில் பாஜக 3 சதவீதம் தொண்டர்களை கொண்ட கட்சி என்று தெரிவித்து, மூன்று சதவீதம் 33 சதவீதம் ஆகுமா என்பதை வரும் தேர்தல் மட்டுமே பார்க்கலாம் என்றார்.
பாஜகவிற்கு எதிராகவே தான் அண்ணாமலை செயல்பட்டு வருவதாக கூறி, அதிசயம் ஏதும் நடந்தால் பாஜக தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் வெற்றி பெறும் என்றும் கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்கள், நிர்வாகிகளை அண்ணாமலை மதித்ததில்லை என்றும் விமர்சித்தார் எஸ்.வி.சேகர்.