தமிழகத்தில் ஒருநாளும் பாஜக ஆட்சி அமைக்காது - நாடாளுமன்றத்தை தெறிக்க விட்ட ராகுல்காந்தி

tamilnadu dmk bjp congress neet tngovernment Rahulgandhi
By Petchi Avudaiappan Feb 02, 2022 05:58 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

மாநில உரிமைகளைக் காப்பதில் ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழகத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய வயநாடு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ‘ஏழைகளுக்கு ஓர் இந்தியா, பணக்காரர்களுக்கு ஓர் இந்தியா’ என பாஜகவை கடுமையாக விமர்சித்தார். 

ஜனாதிபதியின் உரையில்   நாடு எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து எதுவும் இடம் பெறவில்லை.  50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டில் நிலவுகிறது. நீட் தேர்வை விலக்க வேண்டும் எனத் தமிழ்நாடு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால் மத்திய அரசு அதை நிராகரித்துக் கொண்டே இருக்கிறது.

பணமதிப்பு நீக்கம், தவறான ஜிஎஸ்டி கொள்கை, கொரோனா காலத்தில் எந்த உதவியும் செய்யப்படாதது போன்றவற்றால் இந்திய மக்கள் தொகையின் 84% பேர் வருமானம் குறைந்துள்ளது. இந்தியாவின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், சுரங்கங்கள், எரிவாயு விநியோகம், எதுவாக இருந்தாலும் ஒரு சிலருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது.

 இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்.  இந்தியா ஒரு ராஜ்ஜியம் கிடையாது; நீங்கள் ராஜாவும் இல்லை. இதை மறந்துவிடாதீர்கள். இந்த விவகாரத்தில் மொத்த இந்தியாவும் தமிழகத்திடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது என ராகுல்காந்தி ஆவேசமாக பேசினார். அவரின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.