திமுக செய்துள்ள அத்தனை பிரச்சினைகளையும் பாஜக சரி செய்யும் - அண்ணாமலை உறுதி!
திமுக செய்துள்ள அத்தனை பிரச்சினைகளையும் பாஜக சரி செய்யும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாதயாத்திரை
பாஜக சார்பில் ஊழலை எதிர்த்து 'என் மண் என் மக்கள்' என்ற பாதயாத்திரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஈடுபட்டுள்ளார். இந்த பயணத்தில் நேற்று அவர் நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபயணம் மேற்கொண்டார்.
அவருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் மலர்கள் தூவி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். மேலும் பலர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதுகுறித்து ட்விட்டர் பதிவு ஒன்றை அண்ணாமலை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் "குன்னூர் மட்டுமல்ல, நீலகிரி மாவட்டம் முழுவதுமே நிறைய தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் இருக்கின்றன.
ஆனால் இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர் 2G புகழ் ஆ.ராஜா, சுற்றுலாப் பயணி வருவது போல, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தொகுதிக்கு வருகிறார். மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசச் சொன்னால், சனாதன தர்மத்தை தரக்குறைவாகப் பேசிக் கொண்டிருக்கிறார். காட்டு விலங்குகள் பிரச்சினை, 10000 குடியிருப்பு பகுதிகளுக்கு மின்சார வசதி இல்லாமல் இருப்பது, பட்டா இல்லாமல் இருப்பது, தனியார் வன உரிமைச் சட்டம் என மக்கள் பிரச்சினைகளைப் பாராளுமன்றத்தில் பேச, வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில், பாஜக உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பாஜக மக்களோடு இருக்கிறது
நீலகிரி மாவட்ட மக்கள் பிரச்சினைகளுக்காக, பாஜக இரண்டு முறை போராடி தீர்வு கண்டுள்ளது. மக்களுக்கான அனைத்துப் போராட்டங்களிலும் பாஜக மக்களோடு இருக்கிறது. தேயிலை விலை, 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலை இன்றும் இருக்கிறது.
தேயிலை ஆணையத்திடம் விலை உயர்த்திக் கொடுக்க வலியுறுத்தியிருக்கிறோம். தேயிலை விலை பிரச்சினையை பாஜக தீர்த்து வைக்கும் என்று உறுதி அளிக்கிறோம். படுகா சமூக மக்களுக்கான பழங்குடியினர் அந்தஸ்து, சொத்துக்கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, மாநகராட்சி, நகராட்சி வாடகை உயர்வு, என தேர்தல் வாக்குறுதிகளுக்கு மாறாக திமுக செய்துள்ள, ஏற்பட்டுள்ள அத்தனை பிரச்சினைகளையும் பாஜக சரி செய்யும். வரும் பாராளுமன்றத் தேர்தலில், ஊழல்வாதிகளை அண்ட விடக் கூடாது.
ஊழலால் நாட்டின் வளர்ச்சி குறையும். இளைஞர்கள் கனவு நிறைவேறாது. கல்விக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம் என அனைத்துமே ஊழலால் பாதிக்கப்படும். ஆ. ராஜாவின் ஊழல் சொத்துக்களை சமீபத்தில் அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. வரும் பாராளுமன்ற தேர்தலில், ஆ.ராஜா எனும் ஊழல்வாதியை டெபாசிட் இழக்க வைக்க வேண்டும். மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் கரங்களை வலுப்படுத்த தமிழகத்தில் இருந்து, பெருமளவில் பாஜக சார்பாக மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.