பாஜகவுக்கு வாக்காளர்கள் எண்கள் கிடைத்தது எப்படி? உயர்நீதிமன்றம் அதிர்ச்சி
தமிழகத்தோடு சேர்த்து புதுச்சேரிக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு திமுக - காங்கிரஸ் ஒரு கூட்டணியிலும், அதிமுக - என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக ஒரு கூட்டணியிலும் போட்டியிடுகின்றன. தமிழகத்திற்கு சமமாக புதுச்சேரியிலும் பாஜக கவனம் செலுத்தி வருகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பலரும் அங்கு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக சார்பில் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களுக்கு நேரடியாக எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டது உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் அதிர்ச்சி தெரிவித்திருந்த நீதிமன்றம் தேர்தல் ஆணையமும் ஆதார் நிறுவனமும் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. புதுச்சேரியில் தேர்தல் நிறுத்தி வைக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தை விசாரித்து வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆதார் தகவல்கள் எதுவும் திருடப்படவில்லை என UIDAI தெரிவித்திருந்தது. மேலும் பாஜக தரப்பில் வாக்காளர்களிடம் வீடு வீடாக சென்று செல்போன் எண்கள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள எண்களுக்கு மட்டும் பாஜக சார்பில் எப்படி எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டிருக்கிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
மேலும் ஆதார் தகவல் கசிந்தது தொடர்பாக முறையான விசாரணை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.