விடுதலை சிறுத்தையினர் - பாஜகவினர் உட்பட 150 பேர் மீது வழக்குப்பதிவு..!

Party BJP Chennai Case File VCK
By Thahir Apr 16, 2022 03:19 AM GMT
Report

டாக்டர் அம்பேத்கரின் 131 வது பிறந்தநாள் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது .

சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவிக்க விடுதலை சிறுத்தை கட்சியினர் பாஜகவினர் ஒரே நேரத்தில் கூடினர்.

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் மோதலாக மாறி இருகட்சித் தொண்டர்களும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

கம்புகளை கொண்டு தாக்கியும், கற்களை வீசியும் மோதிக்கொண்டனர். இதில் இருதரப்பினருக்கும் மண்டை உடைப்பு மற்றும் ரத்த காயங்களும் ஏற்பட்டன.

காவல்துறை உயர் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர். இதை தொடர்ந்து எதிர்தரப்பை கைது செய்யக் கோரி இரு கட்சியினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நீண்ட நேரத்திற்கு பிறகு இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள k11காவல் நிலையத்தில் பாஜகவினர் தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் கொடுத்தனர்.

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள், பாஜக நிர்வாகியான காயத்ரி ரகுராம் தூண்டுதல் பேரிலேயே பாரதிய ஜனதா தொண்டர்கள் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இதை தொடர்ந்து கோயம்பேடு காவல்துறையினர் நடிகை காயத்ரி ரகுராம் உட்பட இரு கட்சியை சேர்ந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் என தலா 150க்கும் மேற்பட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.