சொந்த கட்சிக்காரர்களாலேயே திமுக தோற்கடிக்கப்படுவார்கள் - வானதி சீனிவாசன் ஆவேசம்!
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் சொந்த கட்சிக்காரர்களாலேயே திமுக தோற்கடிக்கப்படுவார்கள் என்று பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
வானதி சீனிவாசன்
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிகளில் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், "ஒத்த செங்கல்லை வைத்துக்கொண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது வந்தீர்கள்.
உங்களுக்கு வாக்களித்து 3 வருடம் ஆகிறது. அந்த ஒத்த செங்கல்லை வைத்து நீங்கள் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி விட்டீர்களா? மத்திய அரசு எந்த நேரத்தில், எந்த மாதிரி, எந்த திட்டத்தில் எடுத்துக் கொண்டுபோக வேண்டுமோ அந்த முறைப்படி எடுத்துக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள்.
அராஜக ஆட்சி
நேரடியாக ஜப்பானுக்கு சென்று பேசி விட்டு வந்தாகி விட்டது. அதனுடைய பணிகள் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதற்கான காலதாமதம் ஏற்கெனவே அவர்களுக்கும் தெரியும்.
ஆனால் இப்படி இருந்தாலும் கூட இவர்களால் எவையெல்லாம் செய்ய முடியவில்லையோ அந்த பழியை எல்லாம் தூக்கி மத்திய அரசின் மீது போட்டு வசதியாக மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைக்கிறார்கள்.
திமுக இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மற்ற எதிர்க்கட்சிகளால் அல்ல, உங்கள் சொந்த கட்சிக்காரர்களால் தோல்வியை தழுவப் போகிறீர்கள். ஏனென்றால் இன்று மக்களுக்கு நீங்கள் நடத்துகின்ற அராஜக ஆட்சி, நீங்கள் நடத்துகின்ற ஊழல் மீது அப்படி ஒரு வெறுப்பு'' என்று பேசியுள்ளார்.