கிறிஸ்துமஸ் விழா நடத்தும் சேகர் பாபுவால் இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லக்கூட முடியாது - வானதி சீனிவாசன்!
கிறிஸ்துமஸ் விழாவை நடத்தும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரால், இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லக்கூட முடியாது என்பது தான் திராவிடம் மாடல் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
வானதி சீனிவாசன்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "சென்னை, பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் திமுக சார்பில் நேற்று (22-12-2023) நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், "நடப்பது கிறிஸ்துமஸ் விழா. நடத்துவது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு.
இதுதான் திராவிட மாடல் அரசு. திமுக நடத்தும் கிறிஸ்துமஸ் விழாவுக்கு எல்லா மத நம்பிக்கையாளர்களும் வந்திருக்கிறார்கள்.இந்த ஒற்றுமை உருவாவதைச் சிலரால் சகித்துக் கொள்ள முடியவில்லை, அரசியல் லாபங்களுக்காக மதத்தை பயன்படுத்துபவர்களால் மத ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் இந்த ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தப் பாடுபடும் திமுகவை வகுப்புவாத சக்திகளுக்குப் பிடிக்கவில்லை " என்று முழங்கியிருக்கிறார். திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரால், கிறிஸ்துமஸ் விழாவை நடத்த முடியும்.
முஸ்லிம்களின் ரம்ஜான் விழாவை நடத்த முடியும். சனாதனம் தர்மம் அதாவது இந்து மத ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ள முடியும். ஆனால் இந்துக்களின் பண்டிகைகள் எதற்கும் வாழ்த்துச் சொல்ல முடியாது. இதுதான் உண்மையான திராவிட மாடல். இதை முதலமைச்சர் வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனால், மனதிற்கும் சொல்லியிருப்பார். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கிறிஸ்மஸ் விழாவில் கலந்துகொண்டு கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி இருக்கிறார். இது வரவேற்கத்தக்கது. முதலமைச்சராக அவர் தனது கடமையை செய்திருக்கிறார். ஆனால், கடந்த மாதம் தான் தமிழகத்தில் உள்ள 90 சதவீத இந்துக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்கள்.
நிவாரணம் வழங்க வேண்டும்
அனைவருக்கும் பொதுவான முதலமைச்சராக அதற்கு ஒரு வார்த்தை கூட, வாழ்த்துச் சொல்லவில்லை. தீபாவளி மட்டுமல்ல, தைப்பூசம், விநாயகர் சதுர்த்தி என ஹிந்துக்களின் பண்டிகைகள் எதற்கும் அவர் வாழ்த்துச் சொல்வதில்லை.
இப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் வெறுப்பது, அழித்தொழிக்க நினைப்பது, வசை பாடுவது பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லகூட மறுப்பதுதான் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சொன்ன மத ஒற்றுமையா? மத நல்லிணக்கமா? ஒரு மதத்தை மட்டும் அழிக்க நினைப்பவர்கள் ஆட்சியில் இருக்கும் போது அமைதியும், நல்லிணக்கமும் எப்படி இருக்கும்? திமுகவின் உண்மை முகத்தை ஹிந்துக்கள் உணர்ந்து வருவதை திமுகவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. சிறுபான்மையினரின் ஓட்டுகளுக்காக, இந்து மதத்தை திமுக அவமதித்துக் கொண்டே இருக்கிறது. இதை மக்களிடம் அம்பலப்படுத்துகிறது என்பதால் தான் பாஜகவை திமுக போன்ற இந்து வெறுப்பு சக்திகளுக்குப் பிடிக்கவில்லை. எனவே, மற்றவர்களுக்கு பாடம் எடுப்பதை விட்டுவிட்டு, அனைத்து மதங்களையும் சமமாக மதித்துப் போற்ற வேண்டும்.
அப்போதுதான் அமைதியும் நல்லிணக்கமும் உருவாகும்.
கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையில் 98 சதவீத மக்களுக்கு 6,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டு விட்டதாக" கூறியிருக்கிறார். ஆனால் உண்மையில் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானோருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. நிவாரணத்துக்கான டோக்கன் பெறவும், பணத்தை பெறவும் மக்கள் பல நாட்கள் அலைக்கழிக்கப்பட்டனர். பணம் கிடைக்காதவர்கள் விண்ணப்பிக்க படாதபாடு பட்டு வருகின்றனர். ஏற்கனவே மழையால் பாதிக்கப்பட்டு துயரத்தில் இருக்கும் மக்களை மேலும் கஷ்டப்படுத்தாமல் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.