பாஜக மாநில செயலாளர் சூர்யா கைது - கொந்தளிக்கும் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா கைது செய்யப்பட்டதற்கு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜக நிர்வாகி சிறையில் அடைப்பு
பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, கடந்த 7-ம் தேதி தனது ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.
இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த 12-ம் தேதி மதுரை மாநகர காவல் ஆணையரிடம் அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மதுரை மாநகரசைபர் க்ரைம் போலீஸார் நேற்று முன்தினம் நள்ளிரவு, சென்னை தி.நகரில் எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்து மதுரைக்கு அழைத்துச் சென்றனர்.

சென்னையில் கைது செய்யப்பட்ட பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை போலீஸார் நேற்று காலை மதுரைக்கு அழைத்து வந்தனர்.
நீதிமன்றம் விடுமுறை என்பதால் மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி ராம்சங்கரன் வீட்டில் சூர்யாவை போலீஸார் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அமைச்சர் கண்டனம்
அதைத்தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மலக்குழி மரணங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், கேள்வி எழுப்பிய எஸ்.ஜி சூர்யாவை தண்டிக்க முயற்சிப்பது நியாமா? என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.