பள்ளி மாணவிகள் மது குடிப்பதாக பரவிய வீடியோ - பாஜக பெண் நிர்வாகி ஜாமினில் விடுவிப்பு!
அவதூறு பரப்பியதாக பாஜக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
பாஜக சவுதாமணி
பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக உள்ள சவுதாமணி, பள்ளிச் சிறுமிகள் மது குடிப்பது போன்ற வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, திராவிடமாடல் ஆட்சியில் மதுப்புழக்கம்,
போதைப்பொருள் புழக்கம் அதிகஅளவில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, திருச்சி மத்திய மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி ஏ.கே.அருண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
சர்ச்சை வீடியோ
அதில், குழந்தைகளை அச்சுறுத்தும் வகையிலும், தமிழக அரசு மீது அவதூறு பரப்பும் வகையிலும் பதிவிட்டசவுதாமணி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து, சவுதாமணி மீது சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தனிப்படைபோலீஸார் கைது செய்து திருச்சிக்கு அழைத்து வந்தனர்.
அதன்பின், குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட்டதில், வழக்கை விசாரித்த நீதிபதிபாலாஜி, புகார் மீது எவ்வித முகாந்திரமும் இல்லை என்று கூறி, நீதிமன்றக் காவலுக்கு மறுத்து, சவுதாமணியை பிணையில் விடுவித்தார்.