சசிகலா விலகியதன் பின்னணியில் பாஜகவா? வானதி சீனிவாசன் பதில்
சிறைத்தண்டனை முடிந்ததும் விடுதலையான சசிகலாவால், அரசியல் வட்டாரத்தில் மாற்றங்கள் நிகழலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ அரசியலிலிருந்து விலகப்போவதாகவும், திமுக வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
சசிகலா விலகியதன் பின்னணியில் பாஜக இருக்கலாம் என ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பாஜக தேசிய மகளிரணி தலைவியான வானதி சீனிவாசன், விகே சசிகலா அரசியலில் இருந்து விலக பாஜக தான் காரணம் என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுகவிலோ, அரசாங்கத்திலோ எது நடத்தாலும் பாஜக பின்னணியில் இருந்து அழுத்தம் கொடுக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கள் வேண்டுமென்றே பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது.
எனவே சசிகலா விவகாரத்தில் அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும், அதற்கும் பாஜகவிற்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என பல தலைவர்கள் விளக்கமளித்து விட்டனர். ஒருவேளை அப்படி அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தால் அதை சசிகலா வெளிப்படையாக சொல்லியிருக்கலாமே? என கேள்வி எழுப்பியுள்ளார்.