மசூதி போல கட்டப்பட்ட வீடு.. போராட்டத்தில் குதித்த எச்.ராஜா & கோ
புதுக்கோட்டை அருகே மசூதி கட்ட கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள மேற்பனைக்காட்டை சேர்ந்த எம்.முகமது அலி என்பவரும், அவரது மனைவி பெயர் சம்சுல் பீவியும் கடந்த 5 வருடங்களுக்கு முகமது அலி அறக்கட்டளை ஒன்றை தொடங்கி இங்குள்ள வயல் வெளியில் ஒரு கட்டிடம் கட்டியுள்ளனர். பிறகு அந்த கட்டிடத்தின் மேல் பகுதியில் கோபுரங்களை அமைத்து .முகமது அலி மசூதிபோன்று மாற்றினார்.
இதனைக் கண்ட பாஜகவினர் மசூதிப் போன்று கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்தாண்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். ஆனால் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஊராட்சி நிர்வாகம், காவல்துறை ஆகியவற்றுடன் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் 2021 ஆம் ஆண்டுக்குள் மசூதிபோன்ற அமைப்பு அகற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டதால் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதனிடையே சொன்ன தேதி கடந்தும் அந்த அமைப்பு அகற்றப்படவில்லை எனக் கூறி பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தலைமையில் மேற்பனைக்காடு மழைமாரியம்மன் கோயிலில் இருந்து சம்பந்தப்பட்ட கட்டிடத்தை முற்றுகையிடுவதற்காக பாஜகவினர் இன்று சென்றனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குடி எஸ்பி வடிவேல் தலைமையிலான போலீசார் ஊர்வலமாக சென்றவர்களை வழிமறித்து தடுத்து நிறுத்தி அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு எச்.ராஜா உடன்படாததால் இரண்டுமணி நேரத்திற்கு மேலாக நடுரோட்டில் நின்றவாறு ஆலங்குடி எஸ்பி வடிவேல் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளா விஜயன் ஏப்ரல் 12 ஆம் தேதிக்குள் கட்டிட உரிமையாளர் அந்த அமைப்பை இடித்துக்கொள்ள வேண்டும். தவறினால் 13 ஆம் தேதி அதிகாரிகள் முன்னிலையில் அதனை அகற்றுவதாக எழுதி கொடுத்ததுடன் எச்.ராஜாவிடம் உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.