கையில் மதுபாட்டிலுடன் இருக்கும் பாஜக பிரபலம்... பதிலடி கொடுக்கும் காங்கிரஸ்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பார்ட்டிக்கு சென்றதாக பாஜக புகைப்படம் வெளியிட்ட நிலையில் அவர்களுக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்து வருகிறது.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள நைட் கிளப் ஒன்றில் நடைபெற்றதாக கூறப்படும் இந்நிகழ்வில் ராகுல் காந்தி நிற்பதும் அவரை சுற்றியுள்ளவர்கள் மது அருந்துவது போன்ற காட்சிகள் அடங்கியுள்ளது.
இதனிடையே ராகுல் காந்தியை கடுமையாக சாடியுள்ள மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, அவர் முழு நேர சுற்றுலாப்பயணி, பகுதி நேர அரசியல்வாதி. பாசாங்குத்தனம் நிறைந்தவர். பயணம் முடிந்து நேரம் கிடைக்கும் போது போலி கதைகளையும் குற்றச்சாட்டுகளையும் உருவாக்கி நாட்டு மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார் என குற்றம் சாட்டினார்.
Who is this ? ? pic.twitter.com/dVuiiHGpEL
— Manickam Tagore .B??✋மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) May 3, 2022
ஆனால் நமது நட்பு நாடான நேபாளத்திற்கு சென்ற ராகுல் காந்தி அவரது நண்பரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பது நமது கலாசாரங்களில் ஒன்றாகும். திருமண விழாவில் கலந்து கொள்வதில் நமது நாட்டில் குற்றம் ஒன்றுமில்லை என காங்கிரஸ் கட்சி விளக்கமளித்தது.
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான பிரகாஷ் ஜவடேகர் ‛சாம்பெயின்' பாட்டிலுடன் உள்ள புகைப்படத்தை பதிவிட்டு இது யார் ? என விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் திருமண வரவேற்பில் பங்கேற்பதில் என்ன தவறு உள்ளது? ஏன் வதந்தி பரப்புகிறீர்கள்? ராகுலை கண்டு உங்களுக்கு அச்சம் ஏன்? என பாஜகவை பார்த்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இத்தகைய சம்பவங்களால் பாஜக - காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் முற்றியுள்ளது.