கச்சத்தீவு விவகாரம்: இரட்டை வேடம் போடும் பாஜக - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

M K Stalin Tamil nadu DMK BJP Lok Sabha Election 2024
By Jiyath Apr 06, 2024 07:42 AM GMT
Report

கச்சத்தீவு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

கச்சத்தீவு விவகாரம்                     

2024 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறவுள்ளது.

கச்சத்தீவு விவகாரம்: இரட்டை வேடம் போடும் பாஜக - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு! | Bjp Playing A Double Role Says Mk Stalin

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தமிழக தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை 11 இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்று ஆதரவு திரட்டி வருகிறார். இந்த பரபரப்புக்கு இடையே நேர்காணல் ஒன்றில் கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசிய அவர் "கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள் பிரதமர் மோடி தலைமையிலான இதே பாஜக ஆட்சியில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டது.

அப்போது, ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்தார். இப்போது அவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, கச்சத்தீவை நேரு, இந்திராகாந்தி போன்ற முன்னாள் பிரதமர்கள் தாரை வார்த்துக் கொடுத்து விட்டதாகவும், அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அதனை எதிர்க்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இருந்து கச்சத்தீவு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவது பாஜக தான் என்பதும், திட்டமிட்டே தேர்தல் நேரத்தில் வதந்திகளை பரப்பி, தமிழ்நாட்டில் அரசியல் லாபம் பெற முயற்சிக்கிறார்கள் என்பதும் மக்களுக்கு நன்றாக தெரியும். இந்த விவகாரம் விசுவரூபமும் எடுக்கவில்லை. வேறு எந்த ரூபமும் எடுக்கவில்லை.

கதறுகிறார்கள்

10 ஆண்டுகால சாதனைகள் என்று தமிழ்நாட்டு மக்களிடம் சொல்வதற்கு ஒற்றைச் செங்கல்லை தாண்டி வேறு எதுவும் இல்லாத பாஜகவில் பிரதமர், நிதி மந்திரி, வெளியுறவுத்துறை மந்திரி தொடங்கி கத்துக்குட்டிகள் வரை கச்சத்தீவு பற்றிய வதந்திகளை பரப்பிக் கதறுகிறார்கள்.

கச்சத்தீவு விவகாரம்: இரட்டை வேடம் போடும் பாஜக - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு! | Bjp Playing A Double Role Says Mk Stalin

இந்த விவகாரத்தில் தி.மு.க.வின் உறுதியான நிலைப்பாடு என்ன என்பது பாராளுமன்ற விவாதங்களிலும், சட்டமன்றத் தீர்மானத்திலும், மத்திய அமைச்சர்களுடன் கருணாநிதி நடத்திய ஆலோசனைகள் பற்றிய குறிப்புகளிலும் தெளிவாக உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு நேரு ஸ்டேடியத்தில் நடந்த விழாவிலும் பிரதமர் முன்னிலையில் கச்சத்தீவை மீட்டுத்தர வேண்டும் என முதலமைச்சர் என்ற முறையில் கோரிக்கை வைத்தேன்.

10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் இம்மியளவில்கூட செயல்படவில்லை. இலங்கைத் தலைநகர் கொழும்புவில் கடந்த 2-ம் தேதி நடைபெற்ற அந்நாட்டு அரசின் அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய அந்நாட்டு அமைச்சர் பந்துல குணவர்த்தனே, "கச்சத்தீவு விவகாரம் குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை. ஏனெனில் அந்த பிரச்சனை ஒருபோதும் எழுப்பப்படவில்லை" என்று தெரிவித்திருந்ததை பிரபல நாளிதழின் முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தது.

இதில் இருந்தே கடந்த 10 ஆண்டுகளில் மோடி தலைமையிலான பாஜக அரசு கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அம்பலமாகியுள்ளது. 'கெட்டிக்காரன் புளுகு 8 நாளைக்கு' என்பார்கள். அந்த கெட்டிக்காரத்தனம் கூட இல்லாமல் புளுகிய சில மணி நேரங்களிலேயே அம்பலப்பட்டுப் போய்விடுகிறது பாஜக" என்று தெரிவித்துள்ளார்.