பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவு திரட்டுங்கள் - தொண்டர்களுக்கு பாஜக அறிவுறுத்தல்..!
பொது சிவில் சட்டத்திற்கு அதிகமானோரை கருத்து தெரிவிக்க வைக்குமாறு தொண்டர்களுக்கு பாஜக மற்றும் ஹிந்து அமைப்புகள் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்திய சட்ட ஆணையம் வேண்டுகோள்
பொது சிவில் சட்டம் கொண்டு வருவது குறித்து 2016 ஆம் ஆண்டு இந்திய சட்ட ஆணையம் பொது மக்களிடம் கருத்து கேட்டது.

இது குறித்து 2018 ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்த ஆணையம் தற்போதைய சூழலில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவற்கான தேவையில்லை என்று அறிக்கை அளித்தது.
இந்நிலையில், பொது சிவில் சட்டம் குறித்து பொது மக்களும், மத அமைப்புகளும், ஜூலை, 14க்குள் கருத்து தெரிவிக்க இந்திய சட்ட ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதற்காக கருத்து தெரிவிக்க இணையதளத்தில் தனி வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இமெயில் மற்றும் கடிதம் வாயிலாக கருத்து தெரிவிக்கலாம் என்றும் ஆணையம் அறிவித்துள்ளது.
பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு
இதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சமாஜ்வாடி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ராமேஷ் தேர்தல் தோல்விகளில் இருந்து மக்களை திசை திருப்ப, மக்களை பிரிக்க நினைக்கும் பாஜகவின் செயல் திட்டத்தை நியாயப்படுத்தவும் தான் பொது சிவில் சட்டம் குறித்து கருத்துக் கேட்பு நடத்தப்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
ஆதரவு திரட்ட திட்டம்
இந்த நிலையில் பொது சிவில் சட்டம் குறித்து மக்களிடம் பிரசாரம் செய்ய, இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும்,

மடாதிபதிகள், ஜாதி சங்கங்கள், சமூக அமைப்புகள், பொதுமக்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரையும் அதிக அளவில் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க வைக்க வேண்டும்.
இதற்காக தனிப்பட்ட சந்திப்புகள், கலந்துரையாடல் கூட்டங்களை நடத்த வேண்டும் என நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பாஜக மற்றும் ஹிந்து அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.