பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்தவர் - யார் இந்த சி.பி.ராதாகிருஷ்ணன்?
துணை குடியரசு தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணனை பாஜக அறிவித்துள்ளது.
துணை குடியரசு தலைவர்
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் தேர்வு செய்யப்பட்டார்.
2027 ஆம் ஆண்டு வரை அவரது பதவிக்காலம் உள்ள நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் தனது குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜெகதீப் தன்கர் அறிவித்தார்.
அடுத்த குடியரசு துணைத் தலைவர் என்ற கேள்வி எழுந்தது. இதில், பாஜகவின் மூத்த தலைவர்கள் பலரின் பெயரும் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் என்பவரை மோடி தலைமையிலான பாஜக தேர்வு மன்ற குழுவு தேர்வு செய்துள்ளது.
சி.பி.ராதாகிருஷ்ணன்
கோவையை சேர்ந்த 68 வயதான சி.பி.ராதாகிருஷ்ணன், தற்போது மகாராஷ்டிரா மாநில ஆளுநராக உள்ளார்.
முன்னதாக ஜார்கண்ட் மாநில ஆளுநராக இருந்த இவர், தெலுங்கானா, புதுச்சேரி ஆகியவற்றின் பொறுப்பு ஆளுநராக பதவி வகித்தார்.
2004 முதல் 2007 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு பாஜகவின் மாநில தலைவராக பணியாற்றினார் சி.பி.ராதாகிருஷ்ணன்.
மேலும், 1998 மற்றும் 1999 நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு, 2004, 2014, 2019 நாடாளுமன்ற தேர்தலில், பாஜக சார்பில் கோவை தொகுதியில் போட்டியிட்ட இவர் தோல்வியை தழுவினார்.
செப்டம்பர் 9 ஆம் திகதி குடியரசு துணை தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு குடியரசு துணை தலைவரை தேர்வு செய்ய பெரும்பான்மை உள்ளதால் இவரே வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.