காசுகொடுத்து ஆட்சியை கவிழ்க்கிறது பாஜக: வைகோ கடும் விமர்சனம்
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. இதற்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் மத்திய அரசைக் விமர்சனம் செய்து வருகின்றனர் அந்த வகையில்,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கையில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற 2014ஆம் ஆண்டு முதல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளைக் கவிழ்த்து வருகின்றன. இத்தகைய தரம் தாழ்ந்த அரசியலுக்கு, ஆளுநர்கள் உறுதுணையாக இருந்து, அரசியலமைப்புச் சட்ட நெறிகளைக் குழிதோண்டிப் புதைத்து வருகின்றனர்.
அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில், திமுக ஆதரவுடன், பெரும்பான்மை பலத்துடன் இயங்கிய நாராயணசாமி அரசின் சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ஆட்சியைக் கவிழ்க்கும் வேலையையும் செய்து முடித்துள்ளது பாஜக. இவ்வாறு தரம் தாழ்ந்து ஜனநாயகப் படுகொலை நடத்தி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.
சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கட்சி தாவச் செய்து பாஜகவில் சேர்த்துக்கொண்டு, இந்த ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றி இருக்கின்றார்கள்.
அதிமுக கைகட்டி சேவகம் செய்கின்றது. அவர்களுடைய கூட்டணிக்கு, நடைபெற இருக்கின்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.