பாஜக கூட்டணிக்கு வந்தால் வைகோ எம்.பி ஆகலாம் - அழைப்பு விடுத்த மத்திய அமைச்சர்
வைகோ கடைசி உரை
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.
இதில், மதிமுக பொதுசெயலாளர் வைகோ, பாமகவை சேர்ந்த அன்புமணி ராமதாஸ், திமுகவை சேர்ந்த பி.வில்சன், எம்.சண்முகம், என்.சந்திரசேகரன், எம்.முகமது அப்துல்லா ஆகிய 6 பேர் ஆவார்.
இதில், பி.வில்சன் மட்டும் மீண்டும் மாநிலங்களவை எம்.பியாக தேர்வாக உள்ளார். மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்த கமலஹாசன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் திமுக சார்பில் எம்பி ஆக உள்ளனர்.
அதிமுக சார்பில், சட்டத்துறை செயலாளர் இன்பத்துரை மற்றும் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் ம.தனபால் மாநிலங்களவை எம்.பியாக தேர்வாக உள்ளனர்.
இன்று நாடாளுமன்றத்தில் தனது கடைசி உரையை நிகழ்த்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "என்னை முதல் முதலாக மாநிலங்களவைக்கு அனுப்பிய கலைஞருக்கும், வார்த்தெடுத்த முரசொலி மாறனுக்கும் நன்றி.
ஈழத்தமிழருக்காக 13 முறை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளேன். என்.எல்.சி.யை தனியார் மயமாக்காமல் தடுத்திருக்கிறேன். தமிழ் ஈழ விடுதலைக்காக குரல் கொடுப்பதை ஒருபோதும் நிறுத்தமாட்டேன்" என பேசினார்.
பாஜக கூட்டணிக்கு அழைப்பு
தொடர்ந்து பேசிய மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண்,''நாடாளுமன்றத்தின் சிங்கம் என்று அழைக்கப்படும் வைகோ தனது அனல் பறக்கும் பேச்சால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். கட்சி பாகுபாடின்றி அவர் சமூகநலனுக்காக பாடுபட்டார்" என கூறினார்.
அதை தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, ''வைகோ எங்களோடு (பாஜக கூட்டணி) வந்தால் மீண்டும் எம்.பி ஆகலாம்'' என்று தெரிவித்தார்.
பதவிக்காலம் முடிவடையும் நாளில், பாராளுமன்றத்தில் வைத்தே வைகோவை பாஜக கூட்டணிக்கு அழைப்பு விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக மற்றும் அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது.
திமுகவிற்கு எதிரான வலுவான கூட்டணியை உருவாக்க பாஜக மற்றும் அதிமுக முயற்சித்து வருகிறது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் ஆகிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளன.
அதேபோல், திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவையும் தங்கள் கூட்டணிக்கு இழுக்க வைகோவிற்கு எம்பி பதவி தருவதாக கூறி ஆசை காட்டி உள்ளது.
ஆனால், முன்னதாக இது குறித்து விளக்கமளித்த வைகோ, திமுக கூட்டணியில் தொடர்வோம் என தெரிவித்திருந்தார்.