அதிமுகவை விட்டுக்கொடுக்காமல் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - பொதுமக்கள் வரவேற்பு
செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுகவை விட்டுக்கொடுக்காமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் பிப்ரவரி 22 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இதில் 21 மாநகராட்சிகளில் 952 மாநகராட்சி வார்டுகளையும்,2360 நகராட்சி வார்டுகளையும், 4388 பேரூராட்சி வார்டுகளையும் கைப்பற்றி திமுக பெரும் சாதனை படைத்துள்ளது.
தேர்தலில் அதிமுக ஒரு மாநகராட்சியை கூட கைப்பற்ற முடியாமல் மோசமான தோல்வியை தழுவியுள்ளது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த வெற்றியை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்தான் வைத்தேன். எங்கள் கூட்டணிக்கு முழு வெற்றியை தாருங்கள், உங்களுக்காக நாங்கள் பணியாற்றுவோம் என்று கூறினேன். அந்த வெற்றியை வழங்கி இருக்கிறார்கள். 9 மாத கால ஆட்சிக்கு வழங்கப்பட்ட சான்றிதழ் இந்த வெற்றி. எங்கள் வாக்குறுதிகளை நாங்கள் காப்பாற்றுவோம் என தெரிவித்தார்.
அப்போது அதிமுகவை விட பாஜக முந்துகிறதா? என்றும், சில இடங்களில் பாஜக இரண்டாம் இடம் பெற்றுள்ளது என்றும் பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். இதற்கு சில இடங்களை வேட்பாளர்களை மனதில் வைத்து வாக்கு அளிப்பார்கள். சில இடங்களை கட்சிகளை மனதில் வைத்து வாக்களிப்பார்கள். அதை எல்லாம் இப்போது பார்க்க முடியாது. அதனால் அப்படி எல்லாம் இல்லை, அப்படி சொல்ல முடியாது என கூறினார்.
இதனை பார்த்த பொதுமக்கள் பலரும் என்னதான் அரசியல் போட்டி இருந்தாலும் திராவிட கட்சிகள் இடையிலான பிணைப்பை மு.க.ஸ்டாலின் விட்டுக்கொடுக்காமல் பேசியுள்ளதாக பாராட்டி வருகின்றனர்.